பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜின் தற்போதைய நிலை ? போலீசார் விளக்கம்..!
சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது.இந்த கடை நிர்வாகத்தினர் பல்வேறு புதிய நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். கவிச்சிகரமான இந்த திட்டங்களை பார்த்த பொதுமக்கள் அந்த நகை கடையின் திட்டங்களில் சேர்ந்தனர்.
நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.
இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன.மேலும் பலர் சீட்டுகள் முதிர்வடைந்துவிட்ட நிலையில் அதற்குரிய பணத்தையும் நகையும் வழங்காமல் அந்த கடை நிர்வாகம் மோசடி செய்ததாக புகார் இருந்தது.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால், முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.
100 கோடியளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அத்துடன் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரான மதன் செல்வராஜ் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இரண்டு பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்தது.
இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்க நகைகளும் 23 புள்ளி 70 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
தொடர்ந்து நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் நேற்று மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடையின் விளம்பர படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தெரிவித்துள்ளனர். கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.