அண்ணனுக்கு உதவ முடியாது - நடிகர் பிரபு அதிரடி..!

நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு. ராம்குமார் தயாரிப்பாளராகவும், பிரபு நடிகராகவும் உள்ளனர். ராம்குமாரின் மகன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரோடக்ஷன் நிறுவனம் படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.3. 75 கோடி மற்றும் அதற்கான வட்டியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில், சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லத்தின் ஒரு பகுதியை ஜப்தி செய்து அதன் மூலம் துஷ்யந்த் வாங்கிய கடனை ஈடு செய்ய உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. சிவாஜி கணேசன் வீடு ஜப்தி என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், அன்னை இல்லத்தை சிவாஜி தன் பெயரில் உயில் எழுதி வைத்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இவ்வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபு தரப்பில், “அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது. அன்னை இல்லம் மீது எந்த விதத்திலும் எனது அண்ணன் ராம்குமாருக்கோ அவரது வாரிசுகளுக்கோ உரிமையில்லை.
ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டுள்ளது. இதுவரை என் வாழ்நாளில் ஒரு பைசா கூட கடன் வாங்கியதில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ராம்குமார் உங்கள் சகோதரர் தானே. ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள். அந்த கடனை நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாமே” என்று யோசனை தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், “இது போன்று அவருக்கு உதவ முடியாது. நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். அவர் பெற்ற கடனுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது” என்று வாதம் வைத்தார். வாதங்களைக் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.