நடிகர் நாசர் யூடியூப் சேனல் மீது பரபரப்பு புகார்..!
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில் ஏதோ காரணங்களால் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் சுந்தர் சி, குஷ்பு, நடிகர் விஷால், நடிகைகள் வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். அப்போது விஷால் பேசும் போது அவர் கைகள் நடுங்கின. முகமும் வீக்கமாக இருந்தது. அவர் பேசிய போது வார்த்தைகள் குழறின. இதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் குழம்பினர். பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி வந்து, விஷாலுக்கு அதிக காய்ச்சல் என்பதால் அவருக்கு உடல்நிலை பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்.
காய்ச்சல் என்றால் உடல் சோர்வாக இருக்குமே தவிர கைகள் மட்டும் எப்படி நடுங்கும் என கேள்வி எழுந்தது. இதனால் விஷாலுக்கு என்ன ஆச்சு என சமூகவலைதளங்கள் முழுக்க கேள்வி எழுந்தது.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையும் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அறிக்கை விட்டது. இந்த நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு விஷால் வந்ததை பார்த்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது விஷாலின் கைகள் நடுங்கவில்லை.அவரும் தான் நன்றாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
விஷால் தான் நலமாக இருப்பதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு ஏன் கை நடுங்கியது என்பது குறித்து சில யூடியூப் சேனல்கள் பிரபல சினிமா பத்திரிகையாளர்களை வைத்து விவாதித்தன. அந்த வகையில் ஒரு சில யூடியூப் சேனல்களில் விஷாலின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதை கண்டித்து நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் குறிப்பிட்ட யூடியூப் சேனல் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.