பாலியல் குற்றச்சாட்டில் கைதான நடிகர் முகேஷ் 3 மணிநேரத்தில் ஜாமீனில் விடுவிப்பு..!
நடிகையின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கேரள காவல்துறை ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்வதற்கு தடை கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாட்கள் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவைக் கேரள அரசு அமைத்தது. இக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியாகி மலையாள திரையுலகை அதிரவைத்துள்ளது. நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகரும் எம்எல்ஏ., வுமான முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரஞ்சித், சித்திக், முகேஷ் உள்ளிட்ட 7 பேர்மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கிலிருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முகேஷ்க்கு முன்ஜாமின் வழங்கியதுடன், ஐந்து நாட்களுக்குக் கைது செய்யவும் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இன்று (செப்.,24) முகேஷை கைது செய்த போலீசார், கொச்சியில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. விசாரணைகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றார்.