வயநாடு மீட்புப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதியுதவி - நடிகர் மோகன்லால்..!
கேராவின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை இரண்டு பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்து மண்ணோடு மண்ணாக மாய்ந்தனர்.
நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சத்தை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதேபோல் அவரது மனைவி கமலா ரூ.33,000 வழங்கியுள்ளார்.
இந்நிலையில், வயநாடு அருகே முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். ராணுவத்தில் கவுரவ லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, நடிகர் மோகன்லால் தனது விஸ்வசாந்தி ஃபவுண்டேஷன் மூலம் வயநாடு மீட்புப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “நிலச்சரிவினால் வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பை நேரில் கண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்பு மற்றும் பிற அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என அனைவரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்” என்றார்.