கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை...!
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ஆவார். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா ஆவார். நடிகை பவித்ரா கவுடாவுக்கு, சித்ரதுர்காவை சோ்ந்த ரேணுகாசாமி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த நடிகர் தர்ஷன், கூலிப்படையை ஏவி ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடத்தி வந்து படுகொலை செய்தனா்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்கள் பெங்களூரு, துமகூரு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனா். நடிகர் தர்ஷனும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
நடிகர் தர்ஷன் சிறைக்குள் நாற்காலியில் ஹாயாக அமர்ந்து சிகரெட் பிடித்தபடி அமர்ந்து இருந்தார். இதுதொடா்பான புகைப்படம் வைரலாக பரவியது. இதற்கிடையே நடிகர் தர்ஷன் சிறைக்குள் இருந்தபடி செல்போனில் வீடியோ கால் பேசியது தொடர்பான வீடியோவும் வைரலானது. இதையடுத்து நடிகர் தர்ஷனும் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு 100 நாள்களை கடந்த நிலையில் அண்மையில் அவர் ஜாமீன் கேட்டு பெங்களூரு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது .இதுவரை 3 முறை அந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு தீராத முதுகு வலி ஏற்பட்டு அவதி அடைவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டது முதல் நடிகர் தர்ஷனுக்கு முதுகு வலி ஏற்பட்டு அவதி அடைந்து வருகிறார் .இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது.
எனினும் வலி ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு முதுகு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனா். இதனால் நடிகர் தர்ஷன் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.