‘இந்தி தெரிந்தால்தான் லோன்’ என்று கூறிய பேங்க் மேனேஜர் மீது அதிரடி நடவடிக்கை!

இந்தி தெரிந்தால்தான் லோன் தரப்படும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் மேலாளராக இருந்த விஷால் நாராயணன் காம்ளேவிடம், ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் லோன் கேட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, லோன் கேட்டுள்ளார் அவர். ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை வங்கி மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவிடம் பாலசுப்பிரமணியன் கொடுத்தார்.
அப்போது ஆங்கிலத்தில் பேசிய வங்கி மேலாளர் இந்தி தெரியுமா என பாலசுப்ரமணியனிடம் கேட்டுள்ளார். அதற்கு, இந்தி தெரியாது, தமிழ், ஆங்கிலம் தெரியும் என கூறியுள்ளார். தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய வங்கி மேலாளர் மொழிப் பிரச்னை என்று கூறியுள்ளார்.
மருத்துவர் மீண்டும் தன்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
newstm.in