1. Home
  2. தமிழ்நாடு

இனி அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்..!

1

2026, ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் வசதி கட்டாயமாக இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகன டீலர்கள், தாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்துடனும் இரண்டு ஹெல்மெட்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையையும் கட்டாயமாக்கவிருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் இருசக்கர வாகன விபத்துக்களில் பிரேக் தொடர்பான செயல்பாடுகளால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகத் தெரிய வந்ததையடுத்து, ஏபிஎஸ் வசதியை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. அதேபோல், விபத்தின் போது தலையில் அடிபடுவதாலேயே அதிக உயரிழப்புகள் ஏற்படுவதாகத் தெரிய வந்ததையடுத்து இரண்டு ஹெல்மெட்களை வாகனங்களுடன் கொடுப்பதை கட்டாயமாக்கவிருக்கிறது.

ஏபிஎஸ் (ABS - Anti lock braking system) வசதியானது இருசக்கர வாகனங்கள் எந்த இடத்திலும் சறுக்காமல் இருப்பதைத் தடுக்கும். இந்த வசதியானது டிஸ்க் பிரேக்குடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் வசதி கட்டாயமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கத்தக்க முடிவு தான்.

பாதுகாப்பு அடிப்படையில் இந்த விதிமுறை வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், விலை அடிப்படையில் இது விற்பனையை பாதிக்க வாய்ப்பிருப்பதாக பல்வேறு பைக் தயாரிப்பு நிறுவனங்களும் கவலை தெரிவித்திருக்கின்றன.

குறிப்பாக, ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் சுஸூகி ஆகிய சிறிய இன்ஜின் கொண்ட பைக் தயாரிப்பு நிறுவனங்கள் இதனால் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை உயரலாம் எனக் கவலை தெரிவித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் தான் ரூ.1 லட்சத்திற்குள்ளான கம்யூட்டர் பைக்குகளை அதிகம் விற்பனை செய்து வருபவை. 100 சிசி முதல் 124 சிசி வரையிலான இன்ஜின் கொண்ட கம்யூட்டர் பைக்குகளில் டிஸ்க் பிரேக்கே கூட ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படுவதில்லை. நிறைய பைக்குகளின் அடிப்படை வேரியன்டில் டிரம் பிரேக்கே கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விதிமுறையினால், அனைத்து பைக்குகளின் முன்பக்க வீலிலும் டிஸ்க் பிரேக் + ABS வசதி கொடுக்கப்பட வேண்டும். இதனால், இதுவரை ஏபிஎஸ் வசதி கொடுக்கப்படாத பைக்குகளின் விலை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரூ.60,000 என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பைக்கின் விலை கூட இனி ரூ.70,000 என்ற விலையை எட்டும் நிலை உருவாகியிருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விலை அதிகம் தான் என்றாலும், உயிரை விட சில ஆயிரங்கள் முக்கியம் அல்ல என அரசுத் தரப்பில் கருத்து நிலவுகிறது. அது உண்மையும் கூட. உயிரை விட ரூ.10,000 கூடுதல் விலை என்பது பெரிய விஷயமில்லை.

ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயமாக ஏபிஎஸ் இடம்பெற வேண்டும் என்ற கூறப்பட்டாலும், அதற்கு முன்பே ஏபிஎஸ்ஸுடன் கூடிய பைக்குகளை நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இந்தப் புதிய இருசக்கர பாதுகாப்பு விதிமுறையின் அம்சங்கள் குறித்த விரிவான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like