1. Home
  2. தமிழ்நாடு

சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம்..!

Q

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் தவெக சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது இருவரும் பேசிய படியே நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், அண்ணாமலையாவது 10 பேரை வைத்து கொண்டு தேர்தலில் நின்று 20 சதவீத வாக்கு வங்கியை பெற்றார். ஆனால் எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வருவது மாதிரி தெரியவில்லை. பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடும் என்று புஸ்ஸி ஆனந்திடம் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை பற்றி ஒருமையில் பேசியிருந்தார்.இதற்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். 
இந்நிலையில், அந்த வீடியோவுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் களத்தில் அவர், 
எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலை கட்டி எழுப்ப வேண்டும். இதன் காரணமாகவே அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல. இப்படிப்பட்ட சூழலில் அந்த வீடியோவில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக உண்மையாக, நேர்மையாக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் என்னுடைய அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே எடுத்து கொள்கிறேன். எனவே கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படை தன்மையான ஜனநாயகத்தையும் மதித்து பயணிப்பதே என்னுடைய இலக்கு என்று ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவை பலரும் வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like