1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள்குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும்..!

Q

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
விடியாத் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, தெலுங்கானா முதல்-அமைச்சர் (ரேவந்த் ரெட்டி) ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சென்று சுமார் ரூ.31,500 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளதாகவும், கர்நாடக தொழில் துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா சென்று சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஆனால், 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஓட்டி, சினிமா பார்த்து மு.க.ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ. 7,618 கோடிதான். மு.க.ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி, ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெயின் சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலீடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,518 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ. 18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.
இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காகப் போடப்பட்டவையே. இந்த முதலீடுகளை, விடியாத் தி.மு.க அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது.
இதன் மூலம், 35,520 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும் 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அம்மாவின் அரசு 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மாநாட்டிற்கு வந்தவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகக் கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக’ கேலி பேசினார்.
நாங்கள் தொழில் முனைவோர்களையும், ‘கோட்’ போட்ட மு.க.ஸ்டாலினையும் அது போன்று கொச்சைப்படுத்த மாட்டோம். ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கைகள் ஆகும். மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று நச்சுக் கருத்தைக் கூறியுள்ளார்.
2019-ல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அதனை முன்னின்று நடத்தியவர் அப்போதைய தொழில்துறை செயலாளர் ஞானதேசிகன் அவர்கள், 2019 உலக முதலீட்டாளர் (ஜிம்) மாநாட்டின் சிறப்பு அலுவலராக (Special Officer) திறம்பட பணியாற்றியவர் கூடுதல் செயலாளராக இருந்த அருண்ராய், ஞானதேசிகன்-க்கு பிறகு தொழில் துறைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்றார்கள்.
எனது தலைமையில், தொழில் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டினை ஈர்ப்பதற்கும் மற்றும் கொரோனா கால முதலீடுகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளை முன்னின்று செய்த அதிகாரிகள் முருகானந்தம், அருண்ராய் ஆகியோர்தான். 2020-ம் ஆண்டு இறுதியில் ஜிம்-1ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களும், ஜிம்-2ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 27 சதவீத திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தன.
எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. கொரோனா காலத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ரூ. 24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களை, சென்னை, ஹோட்டல் லீலா பேலசில் நடைபெற்ற விழாவில் நானே தொடங்கி வைத்தேன். இந்தப் புள்ளி விவரங்களை அரசு கோப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
‘ஆட்சியாளர்கள் மாறினாலும், அதிகார வர்க்கம் அப்படியேதான் இருக்கும்’. ‘ஆட்சி அமைப்பு (அதிகாரிகள்) நிரந்தரமானது. ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியவர்கள்’. எனது தலைமையிலான அம்மாவின் அரசில், தொழில் துறையில் பணியாற்றியவர்கள்தான், தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் தொழில்துறையின் சிறப்பு செயலாளராக இருந்த அருண்ராய், இந்த ஆட்சியில் தொழில்துறை செயலாளராகப் பணியாற்றுகிறார். அன்றைய தொழில்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் அவர்களை, மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொழில்துறை செயலாளராகவும், நிதித் துறை செயலாளராகவும், தனது செயலாளராகவும் பணியமர்த்தியதுடன், தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராகவும் நியமித்துள்ளார்.
இவர்கள் இருவரிடமும் எங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதைக் கேட்டுத் தெரிந்திருந்தால் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்க மாட்டார். இந்த 40 மாத கால தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதல்-அமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார்.
‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற கிராம பழமொழிதான் பொம்மை முதல்-அமைச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் மு.க.ஸ்டாலின் மிதக்கிறார். சிலரை சிலநாள் ஏமாற்றலாம் – பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை மு.க.ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like