மீண்டும் ஒரு வீடியோ வெளியானதால் பரபரப்பு..! தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்..!

மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, இறந்தார்.
அதுமட்டுமின்றி அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் மரணங்கள் அடிக்கடி நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகிறது.
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். இந்நிலையில், தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனியில் பொங்கல் பண்டிகையின் போது போதையில் சுற்றிய ஆட்டோ டிரைவரைப் பிடித்த தேவதானப்பட்டி போலீசார், அவரை ஸ்டேஷனில் வைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், ஸ்டேஷனில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் பெறப்பட்டுள்ளன.