கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
திண்டுக்கல் மாவட்டம் பழநி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). பழைய கார் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் பொலிரோ காரில் சென்றுள்ளார். பின்னர் இன்று அக்டோபர் 9ம் தேதி அதிகாலை, பழநியை நோக்கி தனது காரில் கிளம்பியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களது கார் மடத்துக்குளம் கருப்புசாமி புதூர் புதிய பைபாஸ் சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்த போது, சாலையின் எதிர்புறம் டெம்போ வேன் ஒன்றில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 23 பேர் பழநியில் சாமி தரிசனம் செய்து விட்டு கேரள நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்த பகுதியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முழுவதுமாக முடிவுறாத நிலையில் இரு வாகனங்களும் ஒரு வழிப் பாதையில் சென்ற நிலையில் திடீரென்று வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த தியாகராஜன் (45). அவரது மனைவி ப்ரீத்தி (40). மகன் ஜெய் பிரியன் (11). ஆகியோர் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தியாகராஜனின் தாயார் மனோன்மணி (65) உடுமலை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கேரளா நோக்கி வேனில் சென்றுக் கொண்டிருந்தவர்களில் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிக்சைக்கு பின் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர்.
அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.