மது அருந்திய போது செய்த சிறு தவறு... 4 பேர் உயிரிழப்பு..!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த 30 வயதாகும் அழகர்ராஜா, கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக இவர் கோவையை அடுத்த சூலூர் அருகே முத்துகவுண்டன் புதூர் சோமனூர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்திருக்கிறார்
அழகர்ராஜா உடன் அதே ஊரை சேர்ந்த 24 வயதாகும் முத்துக்குமார், தினேஷ்குமார், பாண்டீஸ்வரன், வீரமணி உள்ளிட்டோர் தங்கி இருந்தனர். அதே அறையில் கோவை வாகராயம்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தேனியை சேர்ந்த நண்பர்களான சின்னகருப்பு என்ற கருப்புசாமி (26), மனோஜ் ஆகியோரும் தங்கினர். மிகச்சிறிய வீட்டில் 7 பேரும் அந்த சிறிய அளவிலான வீட்டில் தங்கி இருந்தனர்.
இதில் அழகர்ராஜா, முத்துக்குமார், தினேஷ்குமார், வீரமணி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரும் டேங்கர் லாரி டிரைவர்கள் ஆவர். இவர்கள் கோவை இருகூரில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து பெட்ரோல், டீசலை டேங்கர் லாரிகளில் கொண்டு செல்வது வழக்கமாகும். அப்போது அவர்கள், மீதமாகும் பெட்ரோல், டீசலை சேகரித்து வீட்டில் வைத்து இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் அன்றிரவு மது குடித்துள்ளனர்.மது போதையில் இருந்த அழகர்ராஜா, இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என வீட்டிலிருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து எரியும் கியாஸ் அடுப்பின் அருகே வைத்து ஒரு லிட்டர் கேனுக்கு மாற்றினாராம். அப்போது பெட்ரோல் சிதறி கீழே கொட்டியிருக்கிறது.
அப்போது அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீயில் பெட்ரோல் தெறித்ததால் குபீரென தீப்பிடித்தது. இந்த அதிர்ச்சியில் பெட்ரோல் கேனை கீழே போட்டபோது அந்த அறை முழுவதும் குபீரென தீப்பற்றியது. அறைக்குள் இருந்த 7 பேரும் உள்ளே வசமாக சிக்கி கொண்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டனர். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இது குறித்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்த 7 பேருக்கும் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதில் லாரி டிரைவர் அழகர்ராஜா, சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், வீரமணி, மனோஜ் ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
படுகாயமடைந்த தினேஷ்குமார், மனோஜ், பாண்டீஸ்வரன் மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த வீரமணி ஆகிய 4 பேர் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று வீரமணி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.