ஒரு சின்ன தப்பு... கடைக்குள் புகுந்த கார்..!

சூலூரை சேர்ந்தவர் சூரியகுமார். கத்தார் நாட்டில் ஐ.டி என்ஜினியராக பணியாற்றி வருகிறார். விடுமுறை என்பதால் சூரியகுமார் சூலூருக்கு வந்திருந்தார். இதனிடையே சூலூரில் இருந்து சிங்காநல்லூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். இவரது கார் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது பிரேக் பிடிப்பதற்கு பதில் தவறுதலாக எக்ஸலேட்டரை அழுத்தியதாக தெரிகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தினேஷ்குமார் (23) என்பவர் மீதும், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சிந்துஜா (23) என்பவரது மீதும் மோதியவாறு சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது. இதில் விபத்தில் சிக்கிய இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காரை மீட்டு, சூரியகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.