சினிமாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்! கணவனைத் துண்டு துண்டாக வெட்டித் தீ வைத்து...
ஐதராபாத், புவனகிரியை சேர்ந்தவர் நிஹாரிகா (வயது 29). இவருடைய 16-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
அவருடைய தாயார் மறுமணம் செய்து கொண்டார். தந்தை இழப்பு, தாய் மறுமணம் என மனம் உடைந்த நிஹாரிகா படிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரையும், பின்னர் அரியானாவை சேர்ந்த மற்றொருவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.
நிஹாரிகவின் மோசடிகுறித்து 2-வது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிஹாரிகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த சக பெண் கைதியுடன் நிஹாரிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஜெயிலிலிருந்து வெளியே வந்தபோது ஜெயிலில் பழக்கமான கைதியின் மகன் ராணா என்பவருடன் நிஹாரிகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் பெங்களூரு சென்றபோது அங்குள்ள கால்நடை டாக்டர் நிகில் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆன்லைன் திருமண விளம்பரம்மூலம் ஐதராபாத் துகாரகேட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் குமாருடன் நிஹாரிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
நிஹாரிகா தான் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்வதாக அவரிடம் தெரிவித்தார்.
ரமேஷ் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி மகளைத் தவிக்கவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு ரமேஷ் குமார் நிஹாரிகாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் காட்கேசர் ,போச்சவரத்தில் வீடு எடுத்துக் குடும்பம் நடத்தி வந்தனர். ரமேஷ் குமார் நிஹாரிகாவுக்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வழங்கினார். கேட்ட போதெல்லாம் செலவுக்குப் பணம் கொடுத்தார். இதனால் நிஹாரிகா ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தொடங்கினார்.
நிஹாரிகா அடிக்கடி பெங்களூர் சென்று கள்ளக்காதலர்களை சந்தித்து வந்தார். ரமேஷ் குமாருக்கு அவர் நடத்தைமீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நிஹாரிகா ரமேஷ் குமாரிடம் ரூ.8 கோடி கேட்டார். மிகப்பெரிய தொகையாக இருப்பதாக நினைத்த ரமேஷ் குமார் பணம் தர மறுத்தார். இது நிஹாரிகாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக அவருடைய கள்ளக்காதலன் ராணாவை வரவழைத்தார். சம்பவத்தன்று இரவு ரமேஷ் குமார் வீட்டில் மது குடித்துவிட்டு மயங்கியபடி கிடந்தார்.
அந்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமேஷ் குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள கள்ளக்காதலன் நிகில் ரெட்டிக்கு நிஹாரிகா தகவல் தெரிவித்தார்.
பின்னர் ரமேஷ் குமார் பிணத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு 800 கிலோமீட்டர் பயணம் செய்தனர். கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சுண்டிகுப்பாவில் உள்ள காபி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு ரமேஷ் குமார் உடலைத் துண்டு துண்டாக வெட்டித் தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பாதி எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடல் பாகங்களைக் கைப்பற்றி அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பிணத்துடன் சென்ற கார் பதிவு எண் பதிவாகி இருந்தது. அதன் மூலம் நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
ரமேஷ் குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் நிஹாரிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடகு போலீசார் கூறுகையில், ” உடல் பாகங்கள் போர்வையால் சுற்றி எரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உள்ள 500 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் நள்ளிவு 12 மணிக்குக் காப்பி தோட்டத்திற்குள் சென்ற கார் பதிவு எண் தெளிவாகத் தெரிந்தது. அதன்மூலம் விசாரணையைத் தொடங்கினோம்.
அப்போது கார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருடையது எனத் தெரியவந்தது. மேலும் அவரைக் காணவில்லையென அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சந்தேகம் ஏற்பட்டதால் நிஹாரிகாவிடம் விசாரித்தோம். இதில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது” என்றனர்.