1. Home
  2. தமிழ்நாடு

குவியலாக கிடக்கும் குப்பை..! 2 மண்டலங்களில் 800 டன் குப்பை தேக்கம்..!

1

சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
 

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றிய 1,953 பேர், இம்மண்டலங்களில் துாய்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
 

இம்மண்டலங்களில் குப்பை மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைப்பதால், இவர்களுக்கான ஊதியம் குறைக்கப்படுவதாக கூறி, ரிப்பன் மாளிகை முன், கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர்.
 

எட்டவாது நாளாக நடந்த போராட்டத்தை தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், துாய்மை பணியாளர்களிடம் நேற்று பேச்சு நடந்தது.

அப்போது அதிகாரிகள் தரப்பில், 'உங்கள் போராட்டத்தால், இரண்டு மண்டலங்களில், 800 டனுக்கு குப்பை சேகரமாகி உள்ளது. உங்கள் போராட்டமும் திசைமாறி சென்று கொண்டிருக்கிறது. தற்போது, துாய்மை பணியாளர்களைவிட, வெளிநபர்கள் தான் அதிகம் உள்ளனர். எனவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்' என்றனர்.
 

துாய்மை பணியாளர்கள் தரப்பில், 'எங்களுக்கு பணி பாதுகாப்பு முக்கியம். தற்போது பணியில் சேர்ந்தாலும், தனியார் நிறுவன விதிகளின்படி, ஒருசில மாதங்களில் பணியில் இருந்து நாங்கள் நீக்கப்படலாம். எனவே, எங்களுக்கான ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்; பணி பாதுகாப்பும் உண்டு என, எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். மண்டலங்களில் தேக்கம் அடைந்துள்ள குப்பையை, 500 துாய்மை பணியாளர்களை அனுப்பி சுத்தம் செய்து தருகிறோம்' என்றனர்.
 

அதிகாரிகள் தரப்பில், 'எங்களுக்கு பணியாளர்கள் இல்லாமல் இல்லை' என கூறப்பட்டதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சில் தீர்வு ஏற்படவில்லை. இதனால், போராட்டம் தொடருவதாக துாய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.
 

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்களை, சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like