1 கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பூங்கா..! கொடைக்கானலில் இன்று முதல் மலர் கண்காட்சி துவக்கம்..!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வருடந்தோறும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம் .இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது . இந்த நிலையில் மலர்க்கண்காட்சிக்காக சால்வியா, கேலண்டலா, சிங்க முகப் பூ, ஜினியா, ரோஜா செடிகள், டேலியா, லில்லியம், ஸ்டார் பிளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பல லட்சம் மலர் நாற்றுக்கள் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது .
இந்த சூழலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மலர்களும் பூத்துக் குலுங்கி வருகிறது . இந்தப் பூங்கா முழுவதும் பல லட்சம் மலர் நாற்றுக்கள் தயாராகி கோடிக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 61 வது மலர் கண்காட்சி இன்று 17-ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடை பெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி விழா இரண்டு தினங்கள் மட்டுமே நடைபெறும். மூன்று தினங்களும் நடத்தப்பட்டது. முதன் முறையாக இந்த பூங்காவில் மலர் கண்காட்சி விழா 10 தினங்கள் நடத்தப்படுகின்றன.
இது பற்றி கொடைக்கானல் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் காயத்ரி கூறுகையில்,
61-வது மலர் கண்காட்சி விழா இன்று 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 10 தினங்கள் நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு மலர் உருவங்கள் அமைக்கப்படுகின்றன. நெருப்புக் கோழி, சேவல் ,மயில், மலர் வீடு, மலர் இதழ்கள், மரம் வான் கோழி ஆகிய உருவங்கள் கார்னேசன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 6 வண்ணங்களில் கார்னேசன் மலர்களைக் கொண்டு இந்த உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
முதன்முதலாக சுற்றுலாப் பயணிகளுக்காக 360 டனல் என்ற ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்கான புதிய கருவி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவியில் நின்று கொண்டு தங்களது செல்போன் கேமரா மூலம் 360 டிகிரி சுழன்று வீடியோ எடுத்துக்கொள்ள முடியும். சுற்றிலும் மலர்கள் ,மலர் கொத்துகள் அமைக்கப்பட்டு மலர் கூட்டத்திற்கு உள்ளே வீடியோ எடுப்பது போன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளன. முதல் முறையாக இன்று 17-ம் தேதி மற்றும் 18-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாலையில் லேசர் ஒளி காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி நடைபெறும் 10 தினங்களுக்கு மட்டும் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 75 ரூபாயும் சிறியவர்களுக்கு அதாவது 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ரூபாய் 35 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு 61-வது மலர்கண்காட்சி விழா மற்றும் கோடை விழாவினை வேளாண்மை துறை செயலாளர் செல்வி அபூர்வா தொடங்கி வைக்கின்றார். இந்த விழாவில் சுற்றுலாத்துறை ஆணையாளர் குமரவேல் பாண்டியன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொள்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மலர் கண்காட்சி விழா நடைபெறும் நாட்களில் காலை 8 மணிக்கு பூங்கா திறந்து மாலை 7மணி வரை திறந்திருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.