மோசடிக்காரர்களின் புது ட்ரிக்..! அமேசான் நிறுவனத்தின் ஹெச்ஆர் மேனேஜராக இருக்கிறேன்...

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை சேர்ந்த பிடெக் பட்டதாரி வாலிபரை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் அமேசான் நிறுவனத்தின் ஹெச்ஆர் மேனேஜராக இருக்கிறேன். நீங்கள் விருப்பம் இருந்தால் இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்று சொன்னதை நம்பி, இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினார். இதில் எந்த வருமானமும் அவருக்கு வரவில்லை. இதனால் தன்னை தொடர்பு கொண்ட நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாந்ததை உணர்ந்த அவர், புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மோசடிக்காரர்களால் மோசடி செய்யபட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரங்களை நம்பியும் பணம் செலுத்துவதோ, முதலீடு செய்வதோ, பொருட்களை வாங்குவதோ, வேலை வாய்ப்பிற்கு பணம் செலுத்துவதோ அல்லது அவர்கள் கேட்கின்ற கட்டணங்களை செலுத்துவதோ இவை அனைத்துமே இணைய வழி மோசடிக்காரர்களால் மோசடி செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட வழிகளாகும். ஆகவே இணைய வழியில் பணத்தை செலுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தினர்.