நூதன மோசடி..! 12 ஆண்டுகள் வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்..!

2011ம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர் ஒருவர், போபால் போலீஸ் லைன்ஸ் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். பிறகு, சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சிகளை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் நேராக வீட்டுக்கு சென்று விட்டார்.
இது குறித்து மேலதிகாரிக்கு எந்த தகவலோ, விடுப்போ விண்ணப்பிக்காத அவர், தன்னுடைய பணி ஆவணங்களை மட்டும் போபால் போலீஸூக்கு கூரியரில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களும் இது குறித்து எந்த ஆய்வும் செய்யாமல், அதனை ஏற்றுக் கொண்டனர். மேலும், சாகர் போலீஸ் பயிற்சி மையத்தில் அந்த கான்ஸ்டபிள் குறித்து போபால் போலீசார் விசாரிக்கவில்லை. ஆனால், மாதந்தோறும் ரூ. 25,000 வீதம் 12 ஆண்டுகளுக்கு ரூ.28 லட்சம் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஊதிய தர மதிப்பீட்டின் போது, இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், ஆஜரான போது, தான் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, கான்ஸ்டபிளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பளமாக வாங்கிய ரூ.28 லட்சத்தை திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் அங்கிதா கட்டேர்கர் கூறியதாவது: ஒரு நாளும் வேலை செய்யாத ஒருவருக்கு சம்பளம் எப்படி தொடர்ந்து வழங்கப்பட்டது என்பது குறித்து உள்துறை விசாரணை நடைபெறுகிறது. இதுவரை, அவர் ரூ.1.5 லட்சத்தை துறைக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். மீதமுள்ள தொகையை தனது எதிர்கால சம்பளத்திலிருந்து கழிப்பதன் மூலம் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டார். அவர் தற்போது போபால் காவல் எல்லையில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.
விசாரணை இன்னும் நடந்து வருகிறது, மேலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும். மூத்த காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், இந்த விஷயத்தை கையாள்வதில் அல்லது மேற்பார்வையிடுவதில் அலட்சியமாக இருந்ததாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.