புது வகை மோசடி..! இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுளீர்கள்... 22 லட்சம் ஏமாந்த பெண்..!

மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு (வயது 64) கடந்த 5ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் டெல்லியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் வேலை செய்வதாக கூறியுள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் நீங்கள் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாகவும், இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக வழக்கில் 10 ஆண்டுகள் சிறையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க 22 லட்ச ரூபாய் தரும்படி கூறியுள்ளார். தான் சைபர் வலையில் சிக்கியுள்ளதை அறியாத அப்பெண், மிரட்டலுக்கு பயந்து அந்த நபர் கொடுத்த வெவ்வேறு வங்கி கணக்குகளில் 5 நாட்கள் இடைவெளியில் மொத்தம் 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.
பின்னர், 10ம் தேதிக்குப்பின் அந்த நபரிடமிருந்து எந்தவித செல்போன் அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த பெண் தான் சைபர் குற்றவாளியின் வலையில் சிக்கி 22 லட்சம் ரூபாயை இழந்ததை உணர்ந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.