புது வகை மோசடி..! நீங்கள் அடகு வைத்த இடத்தில் இருந்து நாங்களே நகைகளை மீட்டு தருகிறோம்..!
சென்னை இராயபுரம் பகுதியில் வசித்து வரும் கங்கா என்ற பெண் தனது 12 சவரன் நகைகளை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் மூலம் பழக்கமான முருகன் என்ற நபர் நகையை தாங்களே மீட்டு தருவதாகவும் மீட்டு தங்களிடம் அடகு வைத்தால் குறைந்த அளவில் வட்டி என்று, கூறி 12 சவரன் மதிப்புள்ள நகையை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு மீட்டு கொடுத்துள்ளார். குறைந்த வட்டி என்பதால் முருகனின் இந்த யோசனைக்கு செவி சாய்த்த கங்கா, நகையை மீண்டும் முருகனிடம் அடகு வைத்துள்ளார். பின்னர் நகையை மீட்க பணத்தோடு கங்கா சென்றபோதெல்லாம் முருகனும் கங்காவிற்கு பழக்கமான சாருலதா என்ற பெண்ணும் காலம் தாழ்த்தி வந்திருக்கின்றனர்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கங்கா, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து ராயபுரம் போலீசார் சாருலதாவை கைது செய்தனர். சாருலதா, முருகன் இருவரும் சேர்ந்து நகை மட்டுமல்லாது பல்வேறு நூதன முறைகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போல கால் செய்து லோன் வாங்கி தருவதாக கூறி தம்மிடம் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆதாரங்களை கொடுக்கும் நபர்களின் பெயரில் லேப்டாப் போன்ற பொருட்களை வாங்கி ஏமாற்றியதும் தெரிய வந்தது.
சாருலதா மற்றும் முருகனால் பாதிக்கப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்டோர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து நம்ப வைத்து மோசடியில் ஈடுபடுவது 420 மற்றும் 406 ஆகிய பிரிவுகளில் இரண்டாவது குற்றவாளியாக சாருலதாவை கைது செய்த ராயபுரம் போலீசார் முதல் குற்றவாளியான முருகனை தேடி வருகின்றனர்.