நாட்டிற்கே முன்மாதிரியான திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை; அதனால் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். காய்ச்சல் குணமாகி இருந்தாலும் தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை. தொண்டை வழியை விட தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதால் வந்துவிட்டேன். மகளிர் உரிமைத்திட்ட வாக்குறுதியை தி.மு.க. அரசால் நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்கள்.
செயல்படுத்த முடியாது எனக் கூறிய மகளிர் உரிமைத் திட்ட வாக்குறுதியை செயல்படுத்தியுள்ளோம். பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அரசின் பக்கம் உள்ள நியாயத்தை மக்களே புரிந்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே மேல்முறையீடு செய்தனர். மகளிர் உரிமைத் திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
புதிதாக திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு நேற்று (நவ.09) ரூபாய் 1,000 வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது. தகுதியுள்ள யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாகச் செயல்படுத்தி வருகிறது. மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து அதில் இருந்தும் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் ரூபாய் 1,000 வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.