தினமும் அரைமணி நேரம் மட்டும் தூங்கும் மனிதர்..!
ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்துக்கும் தூக்கம் என்ற ஓய்வு மிகவும் அவசியம். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல். சிலருக்கு 8 மணிநேரம் போதாது என்று கூறி இஷ்டத்துக்கும் படுக்கையில் உருள்வதும் உண்டு.
இந்நிலையில் ஜப்பானில் ஒருவர் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார். அதுவும் 12 ஆண்டுகள் அவர் இப்படித்தான் தூங்குகிறார். ஆச்சரியம் காட்டும் அவரின் பெயர் டெய்சுகே ஹோரி, வயது 40. இவருக்கு ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறக்கம் போதுமானதாக உள்ளது. அந்த அரைமணி நேரம் தூக்கத்துக்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்டதாக கூறுகிறார்.
இப்படி தூங்குவதற்காக எனது உடலையும், மூளையையும் பழக்கி கொண்டு விட்டதாகவும், சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெய்சுமே ஹோரியின் இந்த விபரீத பழக்கத்தை அறிந்த மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஒரு மனிதனின் உடலுக்கு இயற்கையாகவே 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியமானது, அதற்கு மாறாக பின்பற்றப்படும் செயல்கள் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.