பின்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக ஓட்டுநர் முன்னோக்கி நகர்த்தியதால் பெரும் விபத்து..!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
'விபத்தில் சிக்கிய பேருந்து விஜயவாடாவில் இருந்து குண்டூருக்கு செல்லவிருந்ததாகவும், பேருந்து நிலையத்தில் வாகனத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக ஓட்டுநர் முன்னோக்கி நகர்த்தியதால் நடைமேடை மீது பேருந்து ஏறியதாக மண்டல மேலாளர் எம்.யேசு தானம் தெரிவித்தார்'என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் வீரய்யா, பேருந்துக்காக காத்திருந்த குமாரி, சிறுவன் அயான்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி, விஜயவாடா பேருந்து நிலையத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், இதுகுறித்து விசாரணை நடத்தி காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.