1. Home
  2. தமிழ்நாடு

விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி ஏன் ? அண்ணாமலை கேள்வி..!

1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறும் போது, இன்றைக்கு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தி இங்கு திணிக்கப்படவில்லை. மத்திய அரசு இந்தியை திணிக்காது. இந்தி விவகாரத்தில் பாஜக தெள்ளத்தெளிவாக உள்ளது. பிரதமர் மோடியும் மிகவும் தெள்ளத்தெளிவாக இருக்கிறார்.

 

ஏனெனில் புதிய கல்விக்கொள்கை பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிக்கும்போது முதல் மொழி தாய்மொழி, 2-வது பாடம் ஆங்கிலம், 3-வது மொழியாக இந்தி என இருந்தது. அதை பிரதமர் நரேந்திர மோடி 3-வது மொழியாக இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை படிக்க வேண்டும் என மாற்றி வைக்க சொன்னார். ஆனால் திமுக அமைச்சர்கள் மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை செய்துவருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 56 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மெட்ரிக்குலேசனில் தமிழ்மொழி என்பது கட்டாயம் கிடையாது. தெலுங்கு, அரபு, மலையாளம், கன்னடம், குஜராத், இந்தி, பரெஞ்ச், உருது போன்ற மொழிகள் இருக்கிறது.

 

இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் 56 லட்சம் மாணவர்கள் வேறொரு திட்டத்தில் போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களை மட்டும் கட்டாயமாக இருமொழிகளை படிக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மார்க்கெட் என்பது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும், இன்றைக்கு எல்லாருமே தனியார் பள்ளிகளை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காகவே, அரசு பள்ளியில் இருமொழிக் கொள்கையை திராவிட முன்னேற்ற கழக அரசு வைத்திருக்கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் குழந்தை பிரெஞ்ச் படிக்கிறது. அரசியல் தலைவர்கள் சிபிஎஸ்சி பள்ளி நடத்துகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பிள்ளைகள் பிரெஞ்ச் படிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்ன விதத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை இரண்டு மொழியில் மட்டும் படிக்க வேண்டும் என்கிறார்கள். திமுக எம்பி கலாநிதி வீராசாமி நடத்தும் மெட்ரிக் பள்ளியில் ஆங்கிலம் கட்டாயம். அதன்பின் தமிழ் உள்பட ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறுகிறார்கள். சென்னையில் நடிகர் விஜய் சிபிஎஸ்சி பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். 2017-ல் இருந்து 2052 வரை விஜய் தனது இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு லீஸ்க்கு கொடுத்துள்ளார். அந்த அறக்கட்டளை எஸ்.ஏ. சந்திரசேகர் பெயரில் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. இந்த அறக்கட்டளை படூரில் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறது. உங்களுக்கு ஒரு நியாயம், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நியாயமா?

தமிழகத்தில் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழிக்கொள்கையை படிக்கிறார்கள் நான் கூறியதற்கு ஆதாரம் இல்லை என சொல்கிறார்கள். அப்படி என்றால் அரசு இவ்வளவு மாணவர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 3-வது மொழி இந்தி வேண்டாம் என்று சொன்னால், வேறு ஏதாவது ஒரு மொழியை 3-வது மொழியாக படிக்கலாம் என்று தான் சொல்கிறோம்" என்று அண்ணாமலை கூறினார்.

Trending News

Latest News

You May Like