உங்களுக்கு ஒரு நியாயம்... ராமதாஸுக்கு ஒரு நியாயமா ? முதல்வர் ஸ்டாலினை விளாசிய தமிழிசை..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதானியின் ரகசிய சந்திப்பு பற்றி தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அத்துடன், அதானி ஊழலில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக காட்டமாக பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ராமதாஸுக்கு ஆதரவாக பாஜக தலைவர்களும் தற்போது களமிறங்கியுள்ளனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “மக்களுக்காக கருத்து கூறினால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லி வருகிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேறு வேலையில்லாமல் இதை சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு வந்துள்ளேன். 2026ஆம் ஆண்டு யாருக்கு வேலை இருக்கப் போகிறது, யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.