நடிகருக்கு ஒரு நியாயம் ? எங்களுக்கு ஒரு நியாயமா ? கர்நாடகா சிறையில் கைதிகள் போராட்டம்..!
கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டுடன் தேநீர் அருந்துவது போன்ற அவரது புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
நடிகர் தர்ஷனின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள ஹிண்டலகா மத்திய சிறையில் உள்ள கைதுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகரெட் மற்றும் புகையிலை பொருள்கள் கேட்டு போராட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வரை போராடுவோம் எனத் தெரிவித்த கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை உணவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
ஹிண்டலகா மத்திய சிறையில் போதைப் பொருள்கள் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பெலகாவி காவல் ஆணையர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுமார் 200 காவலர்கள் கொண்ட குழுவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த சோதனையில், கைதிகள் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருள்கள், சிகரெட் மற்றும் சிறைக்குள் அங்கீகரிக்கப்படாத சில பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.