1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?

Q

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருச்சி மாவட்டம், பழூர் காந்திநகரைச் சேர்ந்த திராவிடமணி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

நல்ல உடல் நலத்துடன் இருந்த திராவிட மணி, திருச்சி போலீசார் கடுமையாகத் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து நீதி விசாரணை கோரி போராடிவரும் நிலையில், திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து போலீஸ் ஸ்டேஷனில் மரணங்கள் தொடர்ந்து வருவது அரசப் பயங்கரவாதத்தின் உச்சமாகும். தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் அத்துமீறிய கைதிற்கு எதிராகக் கொதித்தெழுந்து, அடக்குமுறையை எதிர்த்துச் சட்டப்போராட்டம் நடத்திய தி.மு.க., அரசு, திராவிட மணியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?

அ.தி.மு.க., ஆட்சியில் உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணத்திற்கு நீதிகேட்டு குரல்கொடுத்த முதல்வர் ஸ்டாலின், தமது மூன்றாண்டு ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ள 25க்கும் மேற்பட்ட சிறை மரணங்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்ப்பதேன்? அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்று இன்னும் எத்தனை பேரின் பச்சைப்படுகொலைக்கு திமுக அரசு துணை நிற்கப்போகிறது?

அடிப்படை மனித உரிமை, சமத்துவம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி, கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் பேசிவிட்டு, களங்கம் ஏற்படுத்திய போலீசாரை காப்பாற்ற முனைவது எவ்வகையில் நியாயம்? இதற்குப் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா? என்ற கேள்வியும் எழுகிறது. தி.மு.க., அரசு இனியும் காலங்கடத்தாமல் திராவிட மணியின் மரணத்திற்குக் காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவான, நியாயமான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like