வரலாற்று சாதனை...! தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி..!
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி,ஸ்பெயின் அணியுடன் .உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியுடன் 7 ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா - ஸ்பெயின் இடையே கடும் போட்டி நிலவியது. மாறி மாறி கோல் போட இரு அணி வீரர்களும் கடும் முயற்சி மேற்கொண்டனர்.முதல் பாதியில் ஒரு கோல் கூட பதிவாகவில்லை.
இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி தனது முதல் கோல் அடித்தது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்க் மிரல்லஸ் கோல் திருப்பி அணியின் கோல் கணக்கை தொடங்கினார்.ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அட்டகாசமாக பதில் கோல் திருப்பி கணக்கை 1-க்கு 1 என்ற சமன் செய்தார்.
தொடர்ந்து விளையாட்டிய இந்திய வீரர்கள் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங்குக்கு ப்ரீ ஹிட் வாய்ப்பு கிடைத்தது. அவர் அடித்த பந்தை லாவகமாக கோல் போஸ்ட்க்கு கொண்டு சென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் திருப்பி அணியின் கணக்கு 2-க்கு 1 என முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து இந்திய வீரர்களின் தடுப்பாட்டத்தால் ஸ்பெயின் அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. கடைசி 15 நிமிடங்களில் ஸ்பெயின் அணியால் கடுமையாக போராடிய போதிலும் பதில் கோல் திருப்ப முடியவில்லை.
கடைசி ஒரு நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை இந்திய வீரர்கள் வாவகமாக தடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் இந்திய அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது. தற்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.