1. Home
  2. தமிழ்நாடு

காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்..!

1

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழங்குடி மகளிர் விவசாயிகள் சங்க கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடந்தது. அதில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒகேனக்கல் அருகில் ராசிமணல் பகுதியில் காவிரியின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம். ஆனால் தமிழக அரசு வாய்திறக்க மறுக்கின்றது. தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, அவர் சட்டப்பேரவையில் உரையாற்றியது குறித்து திமுக, புத்தகம் வெளியிட்டுள்ளது, அப்புத்தகத்தின் 180 -181 பக்கங்களில் இது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகம் அழிந்து போகும் என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அப்போது பிரதமராக தேவேகவுடாவை நேரில் சந்தித்தும் கருணாநிதி வலியுறுத்தினார். மேகேதாட்டில் அணை கட்டக் கூடாது. ராசிமணலில் தான் அணை கட்ட வேண்டும் என்று கருணாநிதியே சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சட்டப்பேரவையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரும் ராசிமணலில் அணையை கட்டத் தடை இருக்காது என கருத்து தெரிவித்துள்ளார். ராசிமணலில் அணை கட்டினால் நீரேற்று திட்டம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப முடியும். எனவே, ராசிமணலில் தமிழக அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

மலைவாழ் மக்களுக்கு, மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மஞ்சள் ஏல மையம் மற்றும் உழவர் சந்தை ஆகியவற்றை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். மலைப்பகுதி விவசாயிகளுக்கு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்களாக அமைத்து அவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like