அண்ணாமலை மீது வழக்கா ? விளக்கம் அளித்த ஆளுநர் !
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அவர் கட்டுக் கதைகளை கூறி, மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும், அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேலம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அங்கு விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், ‘அண்ணாமலை மீது இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிய வேண்டும் என்பதால், அரசின் அனுமதியை பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதற்கிடையே அண்ணாமலை மீது வழக்குப்பதிய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியானது.
இது தொடர்பாக கவர்னர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- வெளியிடப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் திரு. கே.அண்ணாமலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
திரு. கே.அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.