குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் எப்போது ? அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும் எனவும் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 20-ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 22 கடைசி தினம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.