1. Home
  2. தமிழ்நாடு

விவேக் சாலையாக மாறிய விருகம்பாக்கம் பத்மாவதி சாலை..!!

விவேக் சாலையாக மாறிய விருகம்பாக்கம் பத்மாவதி சாலை..!!


தமிழ் சினிமா கண்டெடுத்த நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று தனி வழியை கடைப்பிடித்தவர் சின்னக் கலைவாணர் விவேக். தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த அவர் மரக்கன்றுகள் நடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். சாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தனது காமெடி காட்சிகளின் வழியே சாமானியர்களுக்கும் நல்ல செய்தியை, விழிப்புணர்வை கொண்டு சென்ற அவர் இறுதிநாட்கள் வரை சமூகப் பணி மேற்கொண்டார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக விவேக் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் அந்த கோரிக்கையை 5 நாட்களில் மின்னல் வேகத்தில் நிறைவேற்றி உத்தரவிட்டார்.

அதன் படி, திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த பத்ம ஸ்ரீ விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் ஆணை வெளியிட்டது.

இந்நிலையில், நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலை “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என மாற்றப்பட்ட நிலையில் பெயர் பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like