அடுத்த அதிர்ச்சி.. பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவன்..!
காஞ்சிபுரம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராம். இவருடைய மகன் இஷிகாந்த் (16). இவர், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், நேற்று மாலை தனது பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். மாலை 4.30 மணிக்கு கீழே விழுந்த மாணவனை சுமார் 5.30 மணிக்கு பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.
மாணவனின் பெற்றோர், 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாணவனை அனுப்பி வைத்தனர். மாணவனுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மூக்கு பகுதியில் அதிக ரத்தம் வெளியேறியது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘மாணவன் மேலிருந்து கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகுதான் காரணம் என்ன என்பது தெரியவரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீநிதி உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ள சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.