தமிழக அரசுக்கு கொடுத்திருந்த கெடு முடிந்தது - அண்ணாமலையின் அடுத்த அட்டாக்..!!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.22-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.70-க்கும் குறைந்து விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கடந்த முறை (நவம்பர்) வரியைக் குறைக்காத மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, ‘பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, ஒன்றிய அரசு ஒருபோதும் எந்த மாநிலங்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த நிலையில் மாநிலங்கள் தங்கள் வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை’ என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகச் சொல்லியிருந்தது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும். 72 மணி நேரத்தில் சொன்னதைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் 72 மணி நேரத்தில் கோட்டையை முற்றுகையிடுவோம் என அறிவித்தோம். தமிழ்நாடு அரசுக்கு கொடுத்திருந்த கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது. இதுவரை தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி சென்னை கோட்டையை நோக்கி வரத்தான் போகிறோம். கோட்டையை முற்றுகையிடத்தான் போகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். காவல்துறை கைது செய்து, அவர்களை சட்டப்படி தண்டிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் குடும்பத்தை பார்த்துக்கொள்வது கட்சியின் பொறுப்பு. அவர்களின் குடும்பம் எங்களுடைய குடும்பம்போன்றது. இப்போதாவது காவல்துறை விழித்துக்கொள்ளட்டும். முதல்வர் அவர்கள் இப்போதாவது கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்கட்டும். அதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
மேலும், சிறை என்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் யுனிவர்சிட்டியாக மாறியுள்ளது. குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இந்த சம்பவம் சாதாரண மக்களின் மனதில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. 19 நாட்களில் 20 கொலை நடந்துள்ளது. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை செயலிழந்து விட்டது. தமிழ்நாடு காவல்துறைக்கு என இந்திய அளவில் பெயர் இருக்கிறது. அரசியல் தலையீட்டால் அது இப்போது குறைந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை. இதுபோன்று சமீப காலமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, முதல்வர் உடனடியாக கவனம் கொடுத்து, ரவுடிகளை அடக்கி ஒடுக்க வேண்டும். மக்களுக்கு மிக முக்கியம் பாதுகாப்புதான் என்று கூறினார்.