மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவன்.. காரணம் அரசு வேலையா ?
மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேர் முகமது என்பவரது மனைவி ரேணு காதுன். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவருக்கு அரசு மருத்துவமனையில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது.
இந்த நிலையில் அரசு வேலை வேண்டாம் என கூறிய கணவரின் பேச்சைக் கேட்க மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட சண்டையால் ஆத்திரமடைந்த கணவன் ஷேர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையை வெட்டியுள்ளார். அதன் பின்னர் அவரே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின்முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையே, மனைவியை மருத்துமனையில் அனுமதித்த ஷேர் முகமது தலைமறைவாகி உள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரிடம் நடந்தவற்றை ரேணு காதுன் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற பயத்தில் அரசு வேலையில் சேருவதை தடுக்கவே ஷேர் முகமது அவரது கையை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷேர் முகமதுவை தேடி வருகின்றனர்.