வேலை செய்யும் இடத்தில் கால் தடுமாறி இரும்பு குழம்பில் விழுந்த தந்தை..!!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் மேப்பிள்டன் ஃபுவண்டரி என்ற இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளி ஒருவர் கிட்டத்தட்ட 1,500 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் உருகிய இரும்பு தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
39 வயதான ஸ்டீவன் டியர்க்ஸ் என்பவருக்கு ஜெசிக்கா ஷட்டர் என்ற மனைவியும், 12, 5 மற்றும் 4 வயதில் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஸ்டீவன் 5 நாட்கள் மட்டும் அங்கு வேலை செய்த்தாகவும், அவருக்கு இதில், அனுபவம் ஏதும் இல்லை என அங்கு வேலை பார்க்கும் ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளத்தில் நின்று தொட்டிக்குள் இருந்து மாதிரியை எடுக்க முயன்றபோது, அவர் கால் தடுமாறி உள்ளே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உள்ளே அவர் முழுமையாக விழவில்லை என்றும், அவரது பாதி உடல் மட்டுமே இரும்பு குழம்பில் விழுந்து முழுவதுமாக உருகியதாகவும் அங்கு பணிபுரியும் சக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த சம்பவம் ஒரு விபத்தாகவே இருக்கலாம் என்றும் அங்கு இதில் குற்றப் பின்னணி ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடரபாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவர் ஒரு கடின உழைப்பாளி என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதே தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒருவர் உயிரிழந்த நிலையில், இப்போது அடுத்த 6 மாதங்களுக்குள் இன்னொரு மரணம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆலையில் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் கவலைகளும் எழுந்துள்ளது.