மக்களே உஷார்.. பகுதி நேர வேலை.. நூதன முறையில் மோசடி..!
![மக்களே உஷார்.. பகுதி நேர வேலை.. நூதன முறையில் மோசடி..!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/2272f7012c366be882b729961a08f739.jpg?width=836&height=470&resizemode=4)
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆரம்ப கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த புயல்ராஜ் மகன் சிவக்குமார் (25). இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது, விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், சிவக்குமாரின் நண்பர் முரளிதரன் என்பவருக்கு, ‘ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்ப்பதன் மூலம் ரூ.500 முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப்பார்த்த முரளிதரன், அதை தனது நண்பர் சிவக்குமாருக்கு அனுப்பி உள்ளார்.
வெளிநாடு செல்லலாமா..? இங்கேயே வேலை பார்க்கலாமா..? என்று யோசித்துக் கொண்டிருந்த சிவக்குமார் அந்த தகவலை பார்த்ததும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணினார்.
இதையடுத்து, அந்த தகவலில் இருந்த லிங்கில் சென்றபோது, தங்களின் பணியை மேற்கொள்ள தேவையான விவரங்களை பெற்றுக் கொண்டதுடன், குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால் தான் பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கூகுள் பே மூலம் பணம் செலுத்திய நிலையில் அவர்கள் அளித்த பணியை செய்து கொடுத்துள்ளார். இதற்காக அவர்கள் பணம் வழங்கியதைக் கண்ட சிவக்குமார், ‘ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம்’ என நினைத்து, அடுத்தடுத்த பணிகளை பணம் கட்டி மேற்கொண்டுள்ளார்.
அதற்கு அவ்வப்போது அவரது வங்கிக் கணக்கில் பணம் வந்த நிலையில், அந்தப் பணியை தொடர்ந்து செய்து பணம் சம்பாதித்து விடலாம் என்று கருதி பணத்தை செலுத்தி உள்ளார்.
ஆனால், சில நாட்களில் அவரது பணிக்கான எந்த பணமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.
சந்தேகம் அடைந்த சிவக்குமார் இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது, அந்த நிறுவனம் அனைத்தும் போலி என்பதும் அவர்களே இதுபோன்ற பணியை கொடுத்து அதற்கான பணத்தை கொடுத்து ஆசை காட்டி ஒரு கட்டத்தில் அதிக அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு மாயமாகி விடுவார்கள் என்பதும் தெரிந்தது.
இதன்மூலம் 89 ஆயிரத்து 100 ரூபாய் ஏமாந்துள்ளதை உணர்ந்த சிவக்குமார், இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைனில் புகார் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.