ஓபிஎஸ் பெயர் நீக்கம்.. ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு.. மருது அழகுராஜ் விலகல் !!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா உயிரிழந்த பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு நமது எம்ஜிஆர் நாளிதழ் சென்றது. இந்நிலையில், சித்திரகுப்தன் எனும் புனைபெயரில் "காவி அடி, கழகத்தை அழி" என்ற கவிதையை மருது அழகுராஜ் நமது எம்ஜிஆர் நாளிதழில் எழுதியிருந்தார்.
காவி என குறிப்பிட்டு எழுதியதால் பாஜகவை விமர்சித்தாரா என்ற குரல் எழுந்தது. இதையடுத்து, அவர் நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கைக்கு அதிமுக சென்ற பின்னர் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியராக மருது அழகுராஜ் இருந்து வந்தார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், எந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்காமல் மருது அழகுராஜ் நடுநிலை வகித்து வந்தார். இந்நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது.
இந்த சூழலில், நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரித்துவரும் சூழலில் அதனை எதிர்ப்பு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியர் பதவி விலகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். pic.twitter.com/Moy7mCVSg0
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 29, 2022
newstm.in