நாடு முழுவதும் ஒரே மாதிரி.. ஓட்டுநர் உரிமத்தில் புதிய நடைமுறை அறிமுகம்..!
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நாடு முழுவதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது.
இதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு புகார்களும் கோரிக்கைகளும் வந்துள்ளன.
இதன் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்பட உள்ளது. ஓட்டுநர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கு ‘க்யுஆர் கோடு’ விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இதற்கான உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முழு விவரங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் இணையதள பக்கத்தை அணுகலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.