1. Home
  2. தமிழ்நாடு

நான் மத்திய உளவுத்துறை போலீஸ்.. திமுக பிரமுகரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது..!

நான் மத்திய உளவுத்துறை போலீஸ்.. திமுக பிரமுகரிடம் ரூ.7 லட்சம் பறித்தவர் கைது..!


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் சம்பத் (49). திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

சம்பத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘நான் மத்திய உளவுத்துறை போலீஸ். நீங்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் வந்துள்ளது. நீங்கள் வருமானம் குறித்த கணக்கு காட்டாமல் உள்ளீர்கள்.

உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உங்கள் கார், வீடு உள்ளிட்டவைகளை ஜப்தி செய்து விடுவோம். எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் உங்களை அந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சம்பத், 7 லட்சம் ரூபாயை தனது டிரைவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த மர்ம நபர் ரூ.7 லட்சத்தை பெற்று கொண்டு டிரைவரிடம், ‘உன் முதலாளியிடம் போய் சொல்லு. யாரிடமாவது இது குறித்து கூறினால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டினார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பத் வீடு திரும்பினார். பின்பு அவர் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். அந்த நபர் சென்னை புளியந்தோப்பு நரசிம்மா நகர் 5-வது தெருவை சேர்ந்த தாமோதரன் (38) என்பதும், மத்திய உளவு துறை போலீசாக நடித்து சம்பத்திடம் ரூ.7 லட்சம் பறித்ததும் தெரியவந்தது. தாமோதரனை போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like