1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைகிறாரா எலான் மஸ்க்..?

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைகிறாரா எலான் மஸ்க்..?

உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், முன்னணி சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார். இதன்மூலம் அந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளுக்கு உரிமையாளராக, உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.

இதனையடுத்து சமீபத்தில் தான், அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக நியமிக்கப்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைய விரும்பவில்லை என்று தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“எலான் எங்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். நான் நிறுவனத்திற்கு ஒரு சுருக்கமான குறிப்பை அனுப்பினேன், அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் எலான் மஸ்க் இணைவதை பற்றி அவரிடமும் அந்த குழுவினருடனும் பல கட்டங்களாக விவாதிக்கப்பட்டது.

எலான் மஸ்க் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்து, அனைத்து குழு உறுப்பினர்களையும் போல நிறுவனத்தின் நலன்களுக்காக செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் நம்பினோம். அவர் அனைத்து பங்குதாரர்களையும் போல முன்னோக்கி பயணிக்க வேண்டும். இயக்குநர்கள் குழுவில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

ஏப்ரல் 9-ம் தேதியன்று அவர் முறையாக இயக்குநர்கள் குழுவில் இணைவார் என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தோம். ஆனால் அன்றைய தினம் காலையில், அவர் ‘நான் இனி குழுவில் சேர மாட்டேன்’ என்று தெரிவித்தார்.

இது சிறந்தது என்று நான் நம்புகிறேன். எங்கள் பங்குதாரர்கள் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தாலும் சரி இல்லாவிடிலும் சரி, அவர்களின் கருத்துக்களை உள்ளீடுகளை நாங்கள் எப்போதும் மதித்து இருக்கிறோம், என்றும் மதிப்போம்.

எலான் மஸ்க் எங்களுடைய மிகப்பெரிய பங்குதாரர் ஆவார். அவருடைய கருத்துக்களை திறந்த மனதுடன் நாங்கள் வரவேற்போம்.” என்று விவரித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like