ஏன்பா உங்களுக்கு போட்டோஷூட் எடுக்க வேற இடமே கிடைக்கலையா ..?
குரோஷியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டிஜன் இலிசிக் (35) மற்றும் அவர் மனைவி ஆண்ட்ரியா டிகோவ்செவிக் (29) தம்பதிக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரிட்டானியாவுக்கு தேனிலவு சென்றனர்.
தங்கள் தேனிலவு தனித்தன்மையாக இருக்க வேண்டும் என அந்த தம்பதி முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடிய ரயிலில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர்.
இரண்டு கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் 200 பெட்டிகளுக்கும் மேல் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கும் கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும்.
உலகின் ஆபத்தான ரயிலில் தான் அந்த தம்பதி போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். அதுவும் ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து அந்த தம்பதி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிறிஸ்டிஜன் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே உலகில் உள்ள 150 நாடுகளுக்கும் மேல் சென்றுள்ளோம். தாய்லாந்து, சீஷெல்ஸ், அருபா, குராக்கோ, பஹாமாஸ், செயின்ட் லூசியா, மொரீஷியஸ் போன்ற பல அழகான கடற்கரைகளை நாங்கள் இருவரும் பார்த்திருக்கிறோம். மொரிட்டானியா மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளது என்பதை அறிந்துள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் 6, ஆயிரம் பேருக்கு மேல் வருகை தராத இடமாக இது உள்ளது.
இங்கு நாங்கள் சென்ற கிராமத்தில் இருந்த மக்கள் அவர்கள் பாரம்பரிய கலாச்சார முறைப்படி எங்களுக்கு திருமண நிகழ்ச்சியை நடத்தி மகிழ்வித்தார்கள் என கூறியுள்ளனர்.
இவர்களின் போட்டோ ஷுட் வைரலானாலும் இப்படியெல்லாம் கூடவா ரிஸ்க் எடுப்பாங்க, இதெல்லாம் தேவையா என தம்பதியை பலரும் விமர்சித்துள்ளனர்.