முதியவரின் வீட்டை அபகரிக்க முயற்சி – திமுக கவுன்சிலர் மீது புகார்!!
கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த முதியவர் சேகர் (70) சைக்கிள் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி தனது 2 மகன்களுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டார்.
முதியவர் இரண்டாவது மனைவி மற்றும் மகன்களுடன் தனக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறார். தனது வீடு பழுதானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டை இடித்து விட்டு ஹாலோ பிளாக் மூலம் சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் புகழூர் நகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் ஆதரவாளர் என்றும், இந்த இடம் சத்தியமூர்த்திக்கு சொந்தமானது என கூறி புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த வீட்டை இடித்தனர்.
இதையடுத்து, அந்த காட்சிகளை சேகரின் மகன் தர்மராஜ் செல்போனில் பதிவு அதை சமூக வளைதளத்தில், பதிவேற்றம் செய்து அது குறித்த புகாரை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து சேகரும் அவர் மனைவி மற்றும் மகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தனக்கு சொந்தமான நிலத்தை திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தி போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயல்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்தனர்.
சேகர் தற்போது இருக்கும் இடத்தில் பாதி இடத்தை பிரிந்துச் சென்ற தனது மனைவிக்கும் அவர் மகன்களுக்கும் கொடுத்துவிட்டார் மீதி உள்ள பாதி இடத்தில் தனது இரண்டாவது மனைவி மகன்களுடன் வசித்து வருகிறார்.
பிரிந்து சென்ற முதல் மனைவியின் மகன்கள் கவுன்சிலர் சத்தியமூர்த்தியிடம் 8 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே அந்த பணத்திற்காக சத்தியமூர்த்தி, சேகரின் முழு இடத்தையும் அபகரிப்பதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்து இடத்தை அபகரிக்க முயல்வதாக சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
newstm.in