பொட்டு வைத்த விரிவுரையாளர் மீது தாக்குதல்.. காவலர் கைது..!
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேஜ்கோன் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர் லோதா சுமந்தீர். இந்து மதத்தைச் சேர்ந்தவரான இவர் எப்போதும் நெற்றியில் பொட்டு வைத்து கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கல்லூரி முடிந்து வெளியே வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த காவலர் நஸ்முல் தரீக், லோதாவை பார்த்து பொட்டை எடுக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு லோதா மறுத்ததால், அவரை மோசமான வார்த்தைகளால் காவலர் திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லோதாவை தனது மோட்டார் சைக்கிளால் மோதுவது போல வந்திருக்கிறார். இதனால் லோதா நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த லோதா, இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது வங்கதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட காவலரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமான இந்து மதத்தினர் தங்கள் நெற்றியில் பொட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக காவலர் நஸ்முல் தரீக் கைது செய்யப்பட்டார்.