மாஸ்டர் பிளான் போட்டு கொள்ளையடித்தும் ஒரு கொசுவால் வசமாக போலீஸில் சிக்கிய திருடன்..!!
தெற்கு சீனாவில் ஃபுசோவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் யங் சென். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்ததால், இவரது வீட்டில் விளக்குகள் எரியவில்லை. இதனை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருடன் நோட்டமிட்டி, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்களின் வீட்டில் திருட முடிவு செய்து அந்த நபர், கடந்த 10-ம் தேதி நள்ளிரவு அந்தக் குடியிருப்புக்கு சென்றபோது, பாதுகாப்பு பணியில் காவலாளிகள் இருந்ததால் உள்ளே நுழைய முடியவில்லை. இதையடுத்து, குடியிருப்பின் பின்புறம் இருந்த கழிவுநீர் குழாயில் ஏறி, பால்கனி வழியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அதனை மூட்டையாக கட்டி வந்த வழியாகவே செல்ல தயாரானார்.
அப்போது திருடனுக்கு பசி வயிற்றை கிள்ளியதால், திருட வந்த வீட்டில் சாவகாசமாக நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டு இருக்கிறார். பின்னர் உண்ட மயக்கத்தில் ஏசியை போட்டு நன்றாக தூங்கிய திருடன், அதிகாலையில் கொள்ளையடித்த பொருட்களுடன் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், ஏதேனும் தடயத்தை திருடன் விட்டு சென்றிருக்கிறானா என சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களும் கூட வரவழைக்கப்பட்டன. ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில்தான், படுக்கையறையில் உள்ள சுவற்றில் சிறிய ரத்தக்கறை படிந்து இருப்பதை கண்ட போலீசார், அருகில் சென்று பார்த்தபோது, 2 கொசுக்கள் அந்த சுவற்றில் அடிபட்டு செத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த உறைந்த ரத்தத் துகள்களை சேகரித்த போலீசார் டிஎன்ஏ சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரிய திருடர்களை பிடித்த போலீசார் அவர்களின் ரத்த மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பினர். இந்த நிலையில், டிஎன்ஏ சோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வந்துள்ளது. அதில் இருந்த டிஎன்ஏ, பிடிபட்ட ஒரு திருடனின் டிஎன்ஏவிடம் 100 சதவீதம் ஒத்துப்போனதால், அவரிடம் தங்கள் பாணியில் போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட போலீசார், வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சமீபத்தில்தான் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரத்தக்கறை மிகவும் தெளிவாக தெரிந்தது. மேலும், ரத்தத்தின் நிறத்தை வைத்து பார்த்தபோது சிறிது நேரத்துக்கு முன்பே அந்தக் கொசுக்கள் அடிக்கப்பட்டிருக்கலாம் என முடிவுக்கு வந்தோம். கிடைத்த தடயத்தை ஏன் விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த ரத்தத் துகள்களை சேகரித்து டிஏன்ஏ சோதனைக்கு அனுப்பினோம். ஆனால் நாங்கள் சந்தேகப்பட்டதை போலவே அது திருடனின் ரத்தம் என்பது உறுதியாகிவிட்டது. இப்போது கைது செய்துவிட்டோம்” என்றார்.