955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவி பேராசிரியர்கள் பணியை வரைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. ஆனால், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் 152 கோடி செலவை அரசே ஏற்கும் என கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், கல்லூரிகளுக்கு பணமும் ஒதுக்கவில்லை அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 41 கல்லூரிகளும் அரசுடமை ஆக்கப்பட்டு, அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்தக் கல்லூரிகளில் பணியாற்றிய கெஸ்ட் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1030 ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பொறியியல் கலந்தாய்வு முதற்கட்டம் முடிந்து விட்டது. இதில், 10,351 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.