1. Home
  2. தமிழ்நாடு

120000000 லிட்டர் தண்ணீர் தேக்கும் வகையில் திருவொற்றியூரில் 9 குளங்கள் சீரமைப்பு..!

Q

2022ம் ஆண்டு, ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆய்வறிக்கையில், வடசென்னையில் ஒன்பது ரயில்வே மற்றும் மாநகராட்சி குளங்களை சீரமைப்பதன் மூலம், மழைநீரை அதிகளவில் சேமிக்க முடியும் என, தெரியவந்தது.
பர்மா நகர் குளம்
இதையடுத்து, ஐ.டி.சி.,யின் ஒளிமயமான எதிர்காலம் திட்டத்தில், எர்ணாவூர் ரயில்வே குளம், காசி கோவில் குப்பம் குளம், பர்மா நகர் குளம், அம்பேத்கர் நகர் - வண்ணார் குளம், எண்ணுார் - தாமரை குளம், ஆதிதிராவிடர் காலனி குளம், பேசின் குளம், தேவி குளம் மற்றும் கொருக்குப்பேட்டை குளம் உட்பட ஒன்பது குளங்களை சீரமைக்கும் பணியை, 'ஹான்ட் இன் ஹான்ட்' எனும் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதில், 14.2 ஏக்கர் பரப்பளவிலான, எண்ணுார் - பர்மா நகர் குளத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த முட்செடிகள் அகற்றப்பட்டு, துார்வாரி கரைகள் அமைக்கப்பட்டதன் மூலம், 3 கோடி லிட்டர் அளவிற்கு மழைநீர் தேங்கும் அளவிற்கு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
அதே போல், 5.50 ஏக்கர் பரப்பளவிலான காசி கோவில் குப்பம் குளம், 0.5 மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தப்பட்டு, 2 மீட்டர் உயரத்திற்கு கரைகள் பலப்படுத்தப் பட்டுள்ளதால், 1.35 கோடி லிட்டர் மழைநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.
எர்ணாவூர் ரயில்வே குளம், 6.60 ஏக்கரில் தற்போது, 1.60 லிட்டர் அளவிற்கு மழைநீர் தேங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு நீர்வரத்தின்போது குப்பை அடித்து வரப்படுவதை தடுக்கும் பொருட்டு, வடக்கு பக்கம் இயற்கையான வடிகட்டு முறையில், கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எர்ணாவூர் - ஆதிதிராவிடர் காலனி குளம், தண்ணீர் தேங்குவதற்கான சூழலின்றி, மழைநீர் அனைத்தும் மதகுகள் வழியாக, பகிங்ஹாம் கால்வாயில் வீணாக கலந்து வந்தது.
வார்டு, 3, 4 ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் அனைத்தும் சேமிக்கும் பொருட்டு, 6.18 ஏக்கர் பரப்பளவில், புதிய குளம் கட்டமைக்கப்பட்டது. அதன்படி, 38 லட்ச ரூபாய் செலவில், 0.70 மீட்டர் அளவிற்கு ஆழம் மற்றும் நான்கடி உயர கரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், 2.90 கோடி லிட்டர் தண்ணீர் சேகரமாகும். பகிங்ஹாம் கால்வாய் அருகேயே இக்குளம் அமைந்ததால், பின்னோக்கி வெள்ளநீர் ஏறும் பட்சத்தில், குளத்தில் தண்ணீர் ஏறாமல் இருக்க, குளத்தில் போக்கு கால்வாயின் முடிவில், சிறிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தவிர, 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க கூடிய வகையில், கொருக்குப்பேட்டை குளத்தின் பணிகளும் முடிந்துள்ளன.
எண்ணுார் தாமரை குளம், அம்பேத்கர் நகர் - வண்ணார் குளம் ஆகியவற்றில் பகுதியாக பணிகள் முடிந்துள்ளன. பேசின் குளம், தேவி குளத்தில் பணிகள் ஆரம்ப கட்ட அளவில் உள்ளன.
இப்பணிகள் முழுதும் முடியும் பட்சத்தில், 12.70 கோடி லிட்டர் மழைநீர் சேகரிக்க முடியும்; நிலத்தடி நீர்மட்டம் உயரும்; வெள்ள பாதிப்பை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like