9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி: குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!
சிக்கமகளூருவில், மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவி ரக்ஷிதாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 8 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்த ரக்ஷிதா (17) என்ற மாணவி கடந்த 18-ம் தேதி கல்லூரிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ரக்ஷிதாவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மேலும், அவருடைய சிறுநீரகம், கண்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தேவையுடைய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன்மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
இந்நிலையில், 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி ரக்ஷிதாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த ரக்ஷிதாவின் குடும்பத்தினருக்கு மாநில அரசு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் என்று சிக்கமகளூரு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார். இதுதவிர, பல்வேறு அமைப்பினரும் ரக்ஷிதாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.