கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை .. 2 பேர் கவலைக்கிடம்..!
மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அமரன் (25). இவர், மரக்காணம் கடற்கரையை ஒட்டியுள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அவர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து எக்கியர்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரை சந்திக்க விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் முதலமைச்சர் விழுப்புரம் விரைகிறார்.
.png)